இந்தியா

கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளி - சபை ஒத்திவைப்பு

Update: 2022-07-06 06:01 GMT
  • சபையை விட்டு வெளியே வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மந்திரி சஜி செரியனை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கலாச்சாரம் மற்றும் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஜி செரியன்.

இவர், சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேசினார். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.

இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், இது பற்றி பேசிய மந்திரி சஜி செரியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சட்டசபையிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மந்திரி சஜி செரியன், தான் பேசிய கருத்தில் தவறான அர்த்தம் இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த காங்கிரசார், மந்திரி சஜி செரியனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி சஜி செரியன் பிரச்சினையை மீண்டும் கிளப்பினர். இது தொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சபையின் மைய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர்.

அவர்களை இருக்கைக்கு செல்லும்படி சபாநாயகர் ராஜேஷ் கூறினார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்து சபையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ராஜேஷ் அறிவித்தார்.

இதையடுத்து சபையை விட்டு வெளியே வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மந்திரி சஜி செரியனை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News