இந்தியா
null

அரசியலமைப்பை மாற்ற காங்கிரஸ் நினைக்கிறது

Published On 2024-04-24 08:08 GMT   |   Update On 2024-04-24 08:10 GMT
  • இடஒதுக்கீட்டு உரிமையை பா.ஜனதாவால் மட்டுமே பாதுகாக்க முடியும்.
  • இந்தியா பலம் பெற்றால் சில சக்திகளின் ஆட்டம் கெட்டுவிடும்.

பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோது, அந்த அறிக்கையில் முஸ்லீம் லீக்கின் முத்திரை இருந்ததாக அன்றே கூறியிருந்தேன்.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் வாக்கு வங்கிக்காக காங்கிரசுக்கு இந்த மாமனிதர்களின் வார்த்தைகள் மீது அக்கறை இல்லை, அரசியலமைப்பின் புனிதம் பற்றி கவலை இல்லை. அம்பேத்கரின் வார்த்தைகள் மீது அக்கறை இல்லை. ஆந்திராவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் முயற்சித்தது. பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டது. எஸ்சி-எஸ்டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டில் சில பகுதியை திருடி மத அடிப்படையில் சிலருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது.

நாட்டின் அரசியலமைப்பை காங்கிரஸ் மாற்ற நினைக்கிறது. பட்டியலின, பழங்குடியின சகோதரர்களே காங்கிரசின் நோக்கம் தவறாக இருக்கிறது. இடஒதுக்கீட்டு உரிமையை பா.ஜனதாவால் மட்டுமே பாதுகாக்க முடியும்.

காங்கிரசின் மோசமான நிர்வாகம் மற்றும் அலட்சியமே நாட்டின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. இன்று பயங்கரவாதம் மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிராக பா.ஜனதா கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையை பரப்புபவர்களை காங்கிரஸ் ஆதரித்து, அவர்களை துணிச்சலானவர்கள் என்று அழைக்கிறது. பயங்கரவாதிகள் கொல்லப்படும்போது காங்கிரசின் மிகப்பெரிய தலைவர் கண்ணீர் விடுகிறார்.

இதுபோன்ற செயல்களால் நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டது. வளர்ச்சி பாரத் என்று சொன்னால் காங்கிரசும், உலகில் சில சக்திகளும் கோபம் கொள்கிறார்கள். இந்தியா பலம் பெற்றால் சில சக்திகளின் ஆட்டம் கெட்டுவிடும்.

இந்தியா தன்னிறைவு பெற்றால், சில சக்திகள் பின்னால் தள்ளப்படும். அதனால்தான் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் பலவீனமான ஆட்சியை அவர்கள் விரும்புகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று காங்கிரசார் கூறியிருந்தனர்.

தற்போது இதைவிட ஒருபடி மேலே சென்று விட்டார்கள், வாரிசு வரி விதிக்கப் போவதாக காங்கிரஸ் சொல்கிறது. பெற்றோரிடம் இருந்து பெற்ற சொத்துகளுக்கும் வரி விதிக்கப் போகிறது. உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படாது. அதையும் காங்கிரசின் நகங்கள் உங்களிடம் இருந்து பறித்துவிடும்.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

Similar News