இந்தியா

நீண்ட இருக்கையை தனித்தனியாக துண்டித்ததால் மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் மற்றவர் அமர்ந்து நூதன போராட்டம்

Published On 2022-07-22 10:35 GMT   |   Update On 2022-07-22 10:35 GMT
  • மாணவர்கள் மடியில் மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
  • சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலானது. பலரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர நீண்ட இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும், கல்லூரி மாணவ, மாணவிகள் நீண்ட இருக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம்.

இதனை அப்பகுதி மக்கள் அடிக்கடி கண்டித்து வந்தனர். மேலும் மாணவ, மாணவிகள் சேர்ந்து அமர்ந்திருப்பதையும் விமர்சித்தனர்.

பொதுமக்களின் விமர்சனத்தை மாணவ, மாணவிகள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து பேசி வந்தனர்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் இரவோடு, இரவாக நீண்ட இருக்கையை துண்டு, துண்டாக வெட்டி ஒருவர் மட்டுமே அமரும் வகையில்தனித்தனி இருக்கையாக மாற்றி விட்டனர். மறுநாள் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் இருக்கை துண்டிக்கப்பட்டு தனித்தனியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நீண்ட இருக்கை துண்டிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் பஸ் நிறுத்தத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துண்டிக்கப்பட்ட இருக்கையில் மாணவர்கள் அமர்ந்து கொள்ள அவர்களின் மடியில் மாணவிகள் நெருக்கமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரம் செல்ல செல்ல கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலரும் பேராட்டத்தில் இணைந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் மடியில் மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலானது. பலரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

இந்த பதிவை திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவும் பார்த்தார். நேற்று அவர் அந்த பஸ் நிறுத்தத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கேரளாவில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை. முற்போக்கு சிந்தனை உடைய சமூகத்தில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதை ஏற்கமுடியாது.

இன்னும் பழங்கால சிந்தனையில் ஊறி திளைப்பவர்கள், காலம் மாறிவிட்டதை புரிந்து கொள்ள வேண்டும்.

பாழடைந்த இந்த பஸ் நிறுத்தம் பொதுப்பணித்துறையின் அனுமதி இன்றி கட்டப்பட்டு உள்ளது. விரைவில் இங்கு நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் கட்டப்படும், என்றார்.

Tags:    

Similar News