இந்தியா

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறை- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக்கொலை

Published On 2023-06-27 08:12 GMT   |   Update On 2023-06-27 08:12 GMT
  • கூச் பெஹார் பகுதியில் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது.
  • மேற்கு வங்காளத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டதில் இருந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் ( ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதியஜனதா கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.கூச் பெஹார் பகுதியில் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். குண்டு காயம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பாபுஹக்கே என்பவர் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தையொட்டி கூச் பெஹார் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த பகுதி வங்காளதேசத்தையொட்டிய பகுதியாகும்.உள்ளூரை சேர்ந்த சில அரசியல்வாதிகள் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை தங்களுடன் வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டதில் இருந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 8-ந்தேதியில் இருந்து இதுவரை நடந்த வன்முறைக்கு 11 பேர் பலியாகி விட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த மோதலின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.

Tags:    

Similar News