இந்தியா

குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி. ஆவணப்படம் திரையிட காங்கிரஸ் மூத்த தலைவரின் மகன் எதிர்ப்பு

Published On 2023-01-25 07:49 GMT   |   Update On 2023-01-25 07:49 GMT
  • இந்திய நிர்வாக அமைப்புகள் குறித்து பி.பி.சி. நீண்ட காலமாகவே தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
  • ஏ.கே. அந்தோணி மகன் அனில் தெரிவித்துள்ள கருத்துக்கள் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநில முதலமைச்சராக பிரதமர் மோடி பதவி வகித்த போது கடந்த 2002-ம் ஆண்டு அங்கு கலவரம் நடந்தது. இந்த கலவரம் தொடர்பாக மறு விசாரணை செய்துள்ளதாக கூறி பி.பி.சி., 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படம் தயாரித்து உள்ளது. இதன் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது.

இதில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை என்று அந்த ஆவணப்படம் வெளியான யூ டியூப் மற்றும் டிவிட்டர் பதிவுகளை மத்திய அரசு தடை செய்தது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் பி.பி.சி. ஆவண படங்களை மக்களுக்கு திரையிட்டு காட்டப்போவதாகவும் அறிவித்தன.

அதன்படி கேரளாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல இடங்களில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். இதுபோல இளைஞர் காங்கிரசாரும் திருவனந்தபுரம், எர்ணா குளம், பாலக்காடு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர்.

இந்தியாவில் பி.பி.சி. ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாரதிய ஜனதா கட்சியுடன் எனக்கு மிகப்பெரும் கருத்து வேறுபாடுகள் உள்ளது.

ஆனால் இந்திய நிர்வாக அமைப்புகள் குறித்து பி.பி.சி. நீண்ட காலமாகவே தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இத்தகைய எண்ணம் கொண்ட பி.பி.சி. தயாரித்த ஆவணப்படத்தையும், அவர்கள் தெரிவித்து இருக்கும் கருத்தையும் ஆதரிப்பது தேச இறையாண்மைக்கு எதிராக அமையும்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.கே. அந்தோணி மகன் அனில் தெரிவித்துள்ள கருத்துக்கள் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News