இந்தியா

ஏழுமலையான் கோவிலுக்குள் பேனா கேமரா மூலம் வீடியோ எடுத்தது கண்டுபிடிப்பு- பக்தரை பிடிக்க தீவிர விசாரணை

Published On 2023-05-10 12:11 IST   |   Update On 2023-05-10 12:47:00 IST
  • வீடியோவில் கொட்டும் மழையில் ஆனந்த நிலையமானது, தங்க பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் மின்னுகிறது.
  • ஞாயிற்றுக்கிழமை, திருப்பதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. இதனால் 2 மணி நேர மின்தடை ஏற்பட்டது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பாதுகாப்பு கருதி செல்போன்கள் உள்பட எந்த மின்னணு சாதனத்தையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலிருந்து 2 கட்ட சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். சோதனைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலுக்குள் தன்னுடைய கேமரா மூலம் சென்று ஆனந்த நிலையம் மற்றும் கருவறைக்குச் செல்லும் வழி உள்ளிட்டவற்றை வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் கொட்டும் மழையில் ஆனந்த நிலையமானது, தங்க பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் மின்னுகிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது திருப்பதி-திருமலை கோவில் நிர்வாகத்துக்குத் தெரிய வந்தது.

உடனடியாக கோவில் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஆனந்த நிலையத்தின் காட்சிகளைப் பதிவுசெய்து ஆன்லைனில் பகிர்ந்த பக்தர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான தலைமை விஜிலென்ஸ் அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.

"ஞாயிற்றுக்கிழமை, திருப்பதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. இதனால் 2 மணி நேர மின்தடை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ஒரு பக்தர் பேனா கேமராவைப் பயன்படுத்தி விமான கோபுரத்தின் வீடியோவை பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News