இந்தியா

கோழிக்கோடு அருகே ஊருக்குள் 3 சிறுத்தைகள் நடமாட்டம்

Published On 2024-02-23 05:39 GMT   |   Update On 2024-02-23 05:39 GMT
  • வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.
  • வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப் பகுதியை ஒட்டியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.

மேலும் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பரிதாப மாக இறந்தார். அடுத்தடுத்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

வனவிலங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரி அருகே நெல்லிப்பொயில் என்ற பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளது.

அந்த பகுதியில் 3 சிறுத்தை புலிகள் உலாவியபடி இருந்திருக்கிறது. அகனம் பொயில் பகுதியில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் 3 சிறுத்தைப்புலிகள் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுத்தைப்புலிகள் எங்கு பதுங்கி இருக்கின்றன? என்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News