இந்தியா

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரம்.. டிசம்பர் 11-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published On 2023-12-08 01:38 GMT   |   Update On 2023-12-08 01:38 GMT
  • மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
  • காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

மத்திய அரசு கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான வழக்குகளை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளில் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.

 


16 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாங்களை முன்வைத்தனர். வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை டிசம்பர் 11-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்க இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்க இருக்கும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News