இந்தியா

இஸ்லாத்தில் தற்கொலை செய்துகொள்வது ஹராம், அப்பாவிகளைக் கொல்வது பெரும் பாவம் - ஒவைசி

Published On 2025-11-19 15:22 IST   |   Update On 2025-11-19 15:22:00 IST
  • உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் பழைய வீடியோ வெளியானது
  • இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்தனர்.

இது சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், தற்கொலை படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகிறார்கள், உண்மையில் அது தியாக நடவடிக்கை என உமர் பேசியுள்ளான்.

இந்நிலையில், உமர் பேசிய பழைய வீடியோ குறித்து AIMIM கட்சி தலைவர் ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் விதமாக ஒரு பழைய வீடியோ உள்ளது. இஸ்லாத்தில் தற்கொலை செய்து கொள்வது ஹராம், அப்பாவிகளைக் கொல்வது ஒரு பெரிய பாவம். இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை. இது பயங்கரவாதம், வேறு எதுவும் இல்லை.

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மகாதேவ் ஆகியவற்றின் போது அமித்ஷா கடந்த ஆறு மாதங்களில் எந்த உள்ளூர் காஷ்மீரியும் பயங்கரவாதக் குழுக்களில் சேரவில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். இந்தக் குழு எங்கிருந்து வந்தது? இந்தக் குழுவைக் கண்டறியத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News