null
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பதிந்த வழக்குகளின் புள்ளிவிவரம்
- அமலாக்கத்துறை 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது 6,444 பணமோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
- 3,345 வழக்குகளை வருமான வரி துறையே திரும்பப்பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் என்டிஏ அரசு 2014-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிரங்களை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதன்படி 2014 முதல் தற்போதுவரை, அமலாக்கத்துறை 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது 6,444 பணமோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் 2,416 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதே காலகட்டத்தில் 11,106 சோதனைகளை நடத்தியுள்ளது.
ஆனால் இந்த 11 ஆண்டுகளில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் 56 வழக்குகளில் 121 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
அதேநேரம் வருமான வரி துறை, இந்த 11 ஆண்டுகளில், 13,877 வழக்குகளைப் பதிவு செய்து 9,657 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த வழக்குகளில் 522 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். 963 பேர் குற்றவாளி அல்ல என விடுவிக்கப்பட்டனர். மேலும் 3,345 வழக்குகளை வருமான வரி துறையே திரும்பப்பெற்றது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.30,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், 2025-26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.15,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2005 முதல் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 8,100 வழக்குகளில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.