இந்தியா

கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: டி.கே. சிவக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்- மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

Published On 2025-06-05 16:16 IST   |   Update On 2025-06-05 16:16:00 IST
  • சின்னசாமி மைதானத்தில் முன் ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
  • கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்தயி அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கூறியதாவது:-

அதிகாரத்தில் இருந்தவர்கள், விதான சவுதாவில் இருந்தவர்கள் ஒரு தனியார் நிறுவனம் இப்படி ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய அனுமதித்தது ஏன்?.

ஏன் இது கொண்டாடப்பட்டது? இது ஒரு அரசு நிகழ்ச்சி அல்ல. பிறகு ஏன் கொண்டாடப்பட்டது? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அரசாங்கம் ஏன் இதைச் செய்தது? அதனால்தான் நான் பொறுப்புக்கூறலைக் கோருகிறேன்.

முதலில், கொண்டாட்ட நிகழ்ச்சி இலவசம் என்றார்கள். பின்னர், பாஸ் தேவை என்றும், ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கப்பட்டதாகவும் சொன்னார்கள். நுழைவாயில்கள் திறக்கப்படவில்லை. இரண்டு அல்லது மூன்று வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டனஃ அந்த வாயில்களுக்கு முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

உங்கள் சொந்த மாவட்ட துணை கமிஷனர் என்ன மாதிரியான அறிக்கையை வழங்குவார்? அதனால்தான் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க ஒரு பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். டி.கே. சிவகுமார் உடனடியாக ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஷோபா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News