பாகமண்டலா திரிவேணி சங்கமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதை காணலாம்.
கர்நாடகத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை
- கர்நாடகத்தில் 2 வாரத்திற்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
- மலைநாடு பகுதியில் உள்ள சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தம் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தின் கடலோர பகுதிகளிலும், மலைநாடு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதாவது, வழக்கமாக கேரளாவில் ஜூன் 1-ந்தேதியும், கர்நாடகத்தில் அதற்கு அடுத்த வாரமும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
ஆனால் கேரளாவில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவும், கர்நாடகத்தில் 2 வாரத்திற்கு முன்னதாகவும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், குடகு உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, பெலகாவி, தார்வார் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். பாகல்கோட்டை, விஜயாப்புரா, கதக் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், பீதர், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், யாதகிரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மலைநாடு பகுதியில் உள்ள சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சாம்ராஜ்நகர், ஹாசன், மண்டியா, மைசூருவில் கனமழை பெய்யக்கூடும். பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே, கோலார், ராமநகர், துமகூரு, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். உத்தர கன்னடா, சிவமொக்கா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அதி கனமழை பெய்யக்கூடும். அதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்படுகிறது.
தார்வார், பெலகாவி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக், ஹாசன், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.