இந்தியா

ராஜினாமா செய்யாதீங்க.. தொண்டர்கள் கலக்கம்.. முடிவை மறுபரிசீலனை செய்யும் சரத் பவார்!

Published On 2023-05-02 16:47 GMT   |   Update On 2023-05-02 16:47 GMT
  • ராஜினாமா முடிவை திரும்ப பெறாவிட்டால் கட்சி அலுவலகத்தில் இருந்து செல்லமாட்டோம் என்று தொண்டர்கள் கூறினர்.
  • செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்று அஜித் பவார் பரிந்துரை செய்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் (வயது 83) இன்று திடீரென அறிவித்தார். வயது முதிர்வை காரணம் காட்டி அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.

'புதிய தலைமுறையினர் கட்சியையும், கட்சி செல்ல நினைக்கும் பாதையையும் வழிநடத்த வேண்டிய நேரம் இது. தலைவர் பதவிக்கான காலியிடத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு செய்வதற்காக கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்' என சரத் பவார் கூறினார்.

அவரது முடிவு கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமாவை பெரும்பாலான தொண்டர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அவரே தலைவராகத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ராஜினாமா முடிவை திரும்ப பெறாவிட்டால் அங்கிருந்து செல்லமாட்டோம் என்றும் பிடிவாதமாக இருந்தனர். 

இதையடுத்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் உறவினர் அஜித் பவார் ஆகியோர் சரத் பவாரை சந்தித்து ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது இதுபற்றி சிந்திப்பதாகவும், சில நாட்கள் அவகாசம் தேவை என்றும் சரத் பவார் கூறியிருக்கிறார்.

"நான் ஒரு முடிவை எடுத்தேன், ஆனால் உங்கள் அனைவரின் வேண்டுகோள் காரணமாக எனது முடிவை மறுபரிசீலனை செய்வேன். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் தேவை. தொண்டர்கள் வீட்டுக்கு போனால்தான் யோசிப்பேன். சிலர் கட்சிப் பதவிகளையும் ராஜினாமா செய்கின்றனர். அதை நிறுத்தவேண்டும்" என சரத் பவார் கூறியதை மேற்கோள் காட்சி அஜித் பவார் தெரிவித்தார்.

மேலும், சரத் பவார் தலைவராக இருக்க வேண்டும் என்றும், அவருக்கு கீழ் ஒரு செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்ததாகவும் அஜித் பவார் கூறினார்.

Tags:    

Similar News