இந்தியா

மீட்பு பணி

பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து- 7 பேர் மாயம்

Published On 2022-09-29 14:07 GMT   |   Update On 2022-09-29 14:07 GMT
  • மாணவர்கள் உள்ளிட்ட 22 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்
  • விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எம்.பி. வலியுறுத்தினார்.

துப்ரி:

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 29 பயணிகளுடன் சென்ற அந்த படகு, பாஷானிர் பகுதியில் உள்ள பாலத்தின் தூண் மீது மோதியதால் கவிழ்ந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் உள்ளிட்ட 22 பேர் மீட்கப்பட்ட நிலையில், 7 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள துப்ரி மக்களவை உறுப்பினர் பத்ருதீன் அஜ்மல், விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News