இந்தியா

கர்நாடகாவில் பாதுகாப்பு குளறுபடி... திடீரென மாலையுடன் பிரதமரின் அருகே வந்த சிறுவனால் பரபரப்பு

Published On 2023-01-12 13:19 GMT   |   Update On 2023-01-12 15:38 GMT
  • பிரதமர் மோடி காரின் பக்கவாட்டில் நின்றபடி சாலையோரம் நின்றவர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு வந்தார்.
  • பாதுகாப்புப் படையினர் சிறுவனிடம் இருந்த மாலையை வாங்கி பிரதமரிடம் அளித்தனர்

பெங்களூரு:

பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை காரில் பேரணியாக வந்தார். வழிநெடுக்க அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில், ஒரு சிறுவன் திடீரென பிரதமர் மோடிக்கு அருகே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி திடீரென சாலையில் குதித்து பிரதமரை நெருங்கிய அந்த சிறுவனுக்கு சுமார் 15 வயது இருக்கும்.

பிரதமர் மோடி காரின் பக்கவாட்டில் நின்றபடி சாலையோரம் நின்று வரவேற்பு அளித்தவர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த சிறுவன் காவலர்களையும் மீறி கையில் மாலையுடன் பிரதமர் மோடிக்கு அருகே வந்துவிட்டான். பலத்த பாதுகாப்பையும் மீறி காரின் அருகே சிறுவன் வந்ததும், அங்கிருந்த பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு கடைசி நிமிடத்தில் சிறுவனை தடுத்து நிறுத்தி சாலையோரம் கொண்டுபோய் விட்டனர்.

அதற்குள் பிரதமர் மோடி, சிறுவனின் மாலையை பெற்றுக்கொண்டார். பாதுகாப்புப் படையினர் சிறுவனிடம் இருந்த மாலையை வாங்கி பிரதமரிடம் அளிக்க, அதை வாங்கி அவர் காருக்குள்ளே வைத்தார்.

பிரதமர் எந்த இடத்திற்குச் சென்றாலும் எப்போதும் அவருக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அதில் கடைசி அடுக்கு பாதுகாப்பு மாநில காவல்துறையின் பொறுப்பு. மற்றவை மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமாக சிறுவன் எப்படி வந்தான் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News