இந்தியா

ஹேமந்த் சோரன் தலைமறைவு: முதல் மந்திரி வீடு அருகே 144 தடை உத்தரவு

Published On 2024-01-30 07:01 GMT   |   Update On 2024-01-30 07:01 GMT
  • ஹேமந்த் சோரனிடம் கடந்த 20-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  • 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நிலம் மோசடி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரி மாற்றத்தைச் செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக கடந்த 20-ம் தேதி அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.

ஹேமந்த் சோரன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக அவருக்கு அடுத்தடுத்து 8 தடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவற்றுக்கு சோரன் பதில் அளிக்கவில்லை.

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி வீட்டுக்கு விசாரணைக்கு வருவதாக அமலாக்கத் துறையினர் கடிதம் அனுப்பினர். இதற்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை என்ற பெயரில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இருந்தார்.

இதற்கிடையே, முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். தெற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவர் தங்கியிருந்தார். தகவலறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து அவரது உதவியாளர்கள் தொலைபேசியிலும் அமலாக்கத் துறையினர் தொடர்பு கொண்டனர். ஆனால் அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.

என்றாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிலேயே காத்திருந்தனர். சுமார் 18 மணி நேரம் அவர்கள் காத்திருந்த நிலையில் ஹேமந்த் சோரன் திரும்பி வரவில்லை. அவர் அன்று மாலை டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்ப விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். விமான நிலையத்துக்கும் அவர் வரவில்லை. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டெல்லி மாநில எல்லைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டது.

என்றாலும் ஹேமந்த் சோரன் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரை தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹேமந்த் சோரன் காரில் வந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்துமாறு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநில போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் ஹேமந்த் சோரன் வீட்டில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தக் காரை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அது யார் கார், அது எப்படி அங்கு வந்தது என்பது பற்றி விசாரணை நடந்துவருகிறது.

அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணை தொடர்பாக முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் சட்ட ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே அவர் அமலாக்கத்துறை வளையத்துக்குள் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பவே ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஹேமந்த் சோரன் இன்று காலை வரை எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனும் தகவல்களை கேட்டறிந்தார். தன்னை அம லாக்கத் துறையினர் கைது செய்தால் ஹேமந்த் சோரன் தனது மனைவியை முதல் மந்திரியாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அருகே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News