நிலையான வளர்ச்சி: முன்னணி 100 நாடுகள் பட்டியலில் முதல்முறையாக இடம்பிடித்த இந்தியா
- சீனா 74.4 புள்ளிகளுடன் 49-வது இடத்திலும், அமெரிக்கா 75.2 புள்ளிகளுடன் 44-வது இடத்திலும் உள்ளன.
- முதல் 20 இடங்களில் உள்ள நாடுகளில், 19 நாடுகள் ஐரோப்பிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
ஐ.நா. நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் காட்டும் முன்னேற்றம் குறித்து உலக நாடுகளை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. 10-வது ஆண்டாக இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பருவநிலை, பல்லுயிர் பெருக்கம், அடிப்படை சேவைகள் பெறும் வசதி, மின்சாரம் பெறும் வசதி, செல்போன் அகண்ட அலைவரிசை பயன்பாடு, இணையதள பயன்பாடு, 5 வயதுக்குட்பட்டோர் இறப்பு விகிதம், பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், உடல் பருமன் விகிதம், பத்திரிகை சுதந்திரம், நிலையான நைட்ரஜன் மேலாண்மை, ஊழல் உணர்வு குறியீட்டு எண் உள்பட 17 இலக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவற்றில் நாடுகள் எட்டிய இலக்குகள் அடிப்படையில், அவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 100 புள்ளிகள் பெற்ற நாடு, 17 இலக்குகளையும் எட்டி விட்டதாக அர்த்தம். பூஜ்யம் என்றால் எந்த இலக்கையும் எட்டவில்லை என்று அர்த்தம்.
167 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில், இந்தியா முதல்முறையாக 100 முன்னணி நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. 67 புள்ளிகளுடன் 99-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 109-வது இடத்தில் இருந்தது.
சீனா 74.4 புள்ளிகளுடன் 49-வது இடத்திலும், அமெரிக்கா 75.2 புள்ளிகளுடன் 44-வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் 74-வது இடத்தையும், நேபாளம் 85-வது இடத்தையும், வங்காளதேசம் 114-வது இடத்தையும், பாகிஸ்தான் 140-வது இடத்தையும், மாலத்தீவு 53-வது இடத்தையும், இலங்கை 93-வது இடத்தையும் பிடித்துள்ளன. பின்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. முதல் 20 இடங்களில் உள்ள நாடுகளில், 19 நாடுகள் ஐரோப்பிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பருவநிலை, பல்லுயிர் பெருக்கம் ஆகிய இலக்குகளை எட்டுவதில் இந்நாடுகள் சவால்களை சந்தித்து வருகின்றன.
நேபாளம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், வங்காளதேசம், மங்கோலியா ஆகிய கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக முன்னேற்றம் கண்டு வருகின்றன.