இந்தியா

சனாதன தர்மம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2023-09-15 07:27 GMT   |   Update On 2023-09-15 07:27 GMT
  • உதயநிதி கருத்துக்கு பா.ஜனதா மற்றும் வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • கோடிக்கணக்கான இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலர் வழக்குகளை தாக்கல் செய்தனர்.

புதுடெல்லி:

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, சனாதன தர்மத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது தேசிய அளவில் விவாத பொருளாக மாறியது. உதயநிதி கருத்துக்கு பா.ஜனதா மற்றும் வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.

இதற்கிடையே சனாதனத்துக்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் செய்யப்பட்டதுடன் கோடிக்கணக்கான இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலர் இந்த வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்குகள் இன்னும் பட்டியலிடப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் சில வக்கீல்கள் சென்று சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதேபோன்று கோரிக்கை வைப்பதற்கு முன்பு, பதிவாளரிடம் தகவல் தெரிவித்து அதற்கு தனியாக வரிசை எண் பெற வேண்டும். ஆனால் இன்று சில வக்கீல்கள், முறையிடுவதற்கான நேரம் முடிந்த பிறகு தலைமை நீதிபதியிடம் சென்று உதயநிதி மீதான வழக்கை அவசரமாக விசாரிக்க முறையிட்டனர். அதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, எல்லாவற்றுக்கும் உரிய வழிமுறைகள் உள்ளன. ஏற்கனவே இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நீங்களே (வக்கீல்கள்) இப்படி நடந்து கொள்ளலாமா? முறையாக பதிவாளரிடம் தெரிவித்து விட்டு பிறகு என்னிடம் வாருங்கள் என்று தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதையடுத்து கோர்ட்டு பதிவாளரிடம், தகவல் தெரிவித்து அதற்கான அனுமதியை பெற்று அடுத்த வாரம் தலைமை நீதிபதியிடம் மீண்டும் முறையிடுவார்கள் என்று தெரிகிறது.

Tags:    

Similar News