இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில்

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டது

Published On 2022-12-30 15:18 GMT   |   Update On 2022-12-30 15:18 GMT
  • மகரவிளக்கு பூஜை சமயத்தில் தினசரி 90,000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.
  • மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

சபரிமலை:

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ம் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News