இந்தியா

மோகன் பகவத்

பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை பெற வேண்டும்- ஆர்.எஸ்.எஸ். தலைவர் வலியுறுத்தல்

Update: 2022-10-05 08:28 GMT
  • சனாதன தர்மத்தை தடுக்கும் சக்திகள் போலியான கதைகளைப் பரப்புகின்றன.
  • பயங்கரவாதம் மற்றும் சமூக அமைதியின்மையை தூண்டுகின்றன.

விஜயதசமி மற்றும் தசரா கொண்டாட்டங்களையொட்டி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சிறப்பு பொதுக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற மலையேறும் வீராங்கனை சந்தோஷ் யாதவ் பங்கேற்றார். ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் ஒரு பெண் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. 


மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:

பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும்.அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் அதிகாரம் பெற வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சந்தோஷ் யாதவ் பங்கேற்றுள்ளது, மகிழ்ச்சிகரமான மற்றும் கௌரவமான சக்தியை பிரதிபலிக்கிறது. இரண்டு முறை இமயமலையில் ஏறி அவர் சாதனை படைத்துள்ளார்.

இந்து ராஷ்டிரம் பற்றிய கருத்து குறித்து விவாதிக்கப்படுகிறது. பலர் கருத்துடன் உடன்படுகிறார்கள், ஆனால் இந்து என்ற வார்த்தையை சிலர் எதிர்க்கின்றனர், வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கருத்து தெளிவுக்காக, இந்து என்ற சொல்லை நாங்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.

சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எங்களால் அல்லது அமைப்பு ரீதியான இந்துக்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் பயமுறுத்துகிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ்.அல்லது இந்துக்களின் இயல்பு அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சகோதரத்துவம், நட்புறவு என்ற நிலைத்து நிற்கும் உறுதிப்பாடு உள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை வளங்களாக உருவாக்காமல் வளர்ந்தால், அது ஒரு சுமையாக மாறும். மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு என்பது புறக்கணிக்க கூடாத ஒரு முக்கிய விஷயமாகும். மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுகளே புவியியல் எல்லை மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன. 


சனாதன தர்மத்தைத் தடுக்கும் தடைகள், பாரதத்தின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு விரோதமான சக்திகளால் உருவாக்கப்படுகின்றன. அவை போலியான கதைகளைப் பரப்புகின்றன, அராஜகத்தை ஊக்குவிக்கின்றன, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன, மேலும் பயங்கரவாதம், மோதல்கள் மற்றும் சமூக அமைதியின்மையைத் தூண்டுகின்றன

தொழில் படிப்புக்கு ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை பண்பட்டவர்களாகவும், தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழி வகுக்க வேண்டும். இது அனைவருக்குமானது. இந்த சமூகம் புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News