கைம்பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக 7,683 மகாராஷ்டிர கிராமங்களில் தீர்மானம் - பின்னணி என்ன?
- அனைத்து மரபுகளையும் தடை செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இங்கு கிராம சபை நிறைவேற்றியது.
- இந்த முயற்சி ஒரு பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
மகாராஷ்டிராவில் கணவனை 7000க்கும் மேற்பட்ட கிராமங்கள் விதவைகளுக்கு எதிரான பாகுபாடு, ஒடுக்குமுறைகள் மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளன.
மூடநம்பிக்கைகள் மிகுந்த இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாகப் பரவியிருந்த இந்தப் பழக்கவழக்கங்கள் பெண்களுக்கு மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் துன்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவும் செய்தன.
இந்நிலையில் 27,000 கிராம பஞ்சாயத்துகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், 7,683 கிராமங்கள் கிராம சபைகளைக் கூட்டி அங்குள்ள கைம்பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்களை அகற்றுவதாக அறிவித்துள்ளன.
இந்த மாற்றம் 2022 ஆம் ஆண்டு கோலாப்பூர் மாவட்டத்தின் ஹெர்வாட் கிராமத்தில் இருந்து தொடங்கியது. வளையல்களை உடைத்தல், தாலியை அகற்றுதல், வண்ண ஆடைகளை அணிய தடை போன்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்றும்படி விதவைகளை கட்டாயப்படுத்தும் அனைத்து மரபுகளையும் தடை செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இங்கு கிராம சபை நிறைவேற்றியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களை கணபதி பூஜையில் ஈடுபடுத்தி, விழாக்களில் கொடியேற்றுதல், ஹல்தி - குங்குமம் சூட்டுதல் போன்ற திருமண நிகழ்வுகளில் பங்கேற்க வைத்தல் போன்றவையும் கிராமத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஊக்கமளிக்கும் முடிவு ஒரு பிரச்சார வடிவத்தை எடுத்து படிப்படியாக ஆயிரக்கணக்கான கிராமங்கள் இந்த இயக்கத்தில் இணைந்தன. கோயில் பூஜைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கைம்பெண்கள் கலந்துகொள்வதை தடுக்கக் கூடாது எனவும், இதற்காக கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டது.
இந்த பிரச்சாரம் மகாராஷ்டிராவின் சாங்லி, சதாரா, கோலாப்பூர், நாசிக், பீட், உஸ்மானாபாத் போன்ற மாவட்டங்களில் வேகமாகப் பரவியது.
இப்போது விதவைகள் பண்டிகைகளில் பங்கேற்கவும், வண்ணமயமான ஆடைகளை அணியவும், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் திருமண விழாக்களுக்கு அழைக்கப்படுகிறார்கள், மேலும் பல கிராமங்களில் விதவைகள் மறுமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த பிரச்சாரத்தின் முக்கிய முகமாக சமூக ஆர்வலர் பிரமோத் ஜின்ஜாடே திகழ்கிறார். "ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உண்டு. கணவரின் மரணத்திற்குப் பிறகு அவளுடைய வாழ்க்கை முடிவடைவதில்லை, ஆனால் அது ஒரு புதிய தொடக்கமாகும்" என்று அவர் கூறுகிறார்.
பல கிராமங்களில் இன்னும் மாற்றம் தேவை என்றும், ஆனால் இந்த முயற்சி ஒரு பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.