null
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி உதவி அறிவித்த ஆர்சிபி
- கர்நாடக அரசு பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது.
- கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி-கேஎஸ்சிஏ அறிவித்துள்ளது.
பெங்களூரு:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து காலை முதலே லட்சக்கணக்கான பேர் விதானசவுதா முன்பு குவியத் தொடங்கினர். கூட்டம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மாலை 3 மணியளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விதான சவுதா முன்பு குவிந்திருந்த லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி புறப்பட்டனர். இதேபோல் பெங்களூரு நகரின் நாலா திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் சின்னசாமி மைதானத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 9 பேர் மருத்துவ மனையில் இறந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் மற்றும் காயம் அடைந்து கதறினர்.
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்த சம்பவத்தில் 47 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்கும். இந்த துயர சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து பெங்களூரு நகர துணை ஆணையர் ஜி. ஜெகதீஷை மாஜிஸ்திரேட் விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி அறிவித்துள்ளது.