இந்தியா

வக்பு சட்டத்திற்கு எதிராக அசாமிலும் வெடித்த போராட்டம்.. கல்வீச்சு, வன்முறையால் போலீசார் தடியடி

Published On 2025-04-13 20:02 IST   |   Update On 2025-04-13 20:02:00 IST
  • வன்முறையில் தொடர்புடைய 150 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
  • அனுமதியின்றி 400 பேர் வரை வீதிகளில் திரண்டு சாலை மறியல் மற்றும் ஆர்பாட்டத்தில் சென்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. வன்முறையில் தொடர்புடைய 150 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

மேலும் திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில், வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் பத்ருஜ்ஜாமன் தலைமையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று பேரணியாக சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திடீரென வன்முறையில் இறங்கினர். அவர்கள் காவலர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசினர்.

இதில், குப்ஜார் பகுதியில் நடந்த வன்முறையில் கைலாஷாகர் பகுதிக்கான சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 18 போலீசார் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கும்பலை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து அசாம் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சில்சார் பெரெங்கா பகுதியில், அனுமதியின்றி 400 பேர் வரை வீதிகளில் திரண்டு சாலை மறியல் மற்றும் ஆர்பாட்டத்தில் சென்றனர்.

தேசிய கோடி மற்றும் கறுப்புக்கொடிகளை ஏந்திய அவர்கள், ஆளும் பாஜக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். அதில் சிலர் கற்களை வீசத் தொடங்கியதால் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் கூட்டம் கலைக்கப்பட்டு போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News