இந்தியா

பிரதமர் மோடி இன்று இலங்கை பயணம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2025-04-04 07:30 IST   |   Update On 2025-04-04 07:30:00 IST
  • இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ள நிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு .
  • பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி தாய்லாந்து பயணத்தை தொடர்ந்து, இன்று இலங்கைக்கு செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ள நிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம், பாதுகாப்புத் துறையில் பயிற்சித் திட்டங்கள் மற்றும் சில உபகரணங்களைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் மேம்பாலத்தின் திறப்பு விழா வரும் 6-ந் தேதி நடைபெறுகிறது.

பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

இதற்காக, இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் செல்ல உள்ளன.

இதற்காக நேற்று உச்சிப்புளிக்கு வந்த 4 எம். ஐ.17 ஹெலிகாப்டர்கள் இலங்கை காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

திறப்பு விழா நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி அன்று காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு செல்லும்.

அங்கு காலை 10.40 மணிக்கு பிரதமர் மோடியை அழைத்துக் கொண்டு 11.40 மணிக்கு மண்டபம் முகாம் ஹெலிபேடில் வந்து இறங்கும்.

இவற்றில் மூன்று ஹெலிகாப்டர் மண்டபத்திற்கும், ஒரு ஹெலிகாப்டர் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் இயக்கப்பட உள்ளன. இதன் ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News