இந்தியா

அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் அஜித்பவார்- சஞ்சய் ராவத் இடையே திடீர் மோதல்

Published On 2023-04-20 04:02 GMT   |   Update On 2023-04-20 04:02 GMT
  • சாம்னாவில் சஞ்சய் ராவத் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
  • எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி நடக்கவில்லையா என்பதை அஜித்பவார் தான் கூறவேண்டும்.

மும்பை :

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான "சாம்னா"வில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரையில் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்தபோது, "யாராவது (அஜித்பவார்) தனிப்பட்ட முடிவை எடுத்தாலும், தேசியவாத காங்கிரஸ் பா.ஜனதாவுடன் ஒருபோதும் சேராது" என்று சரத்பவார் கூறியதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் பா.ஜனதாவுடன் கைகோர்க்க இருப்பதாக வெளியாகும் ஊகங்களுக்கு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்த அஜித்பவார், "தான் உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

மேலும் சஞ்சய் ராவத்தை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக தாக்கி பேசினார். இதுபற்றி அவர், "தற்போது மற்ற கட்சியை சேர்ந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் போல நடந்துகொள்வதாக" கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மட்டுமே எனது நம்பத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப முடியும். நான் அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறேன். நான் பத்திரிக்கையில் அப்படி ஒன்றும் தவறாக எழுதவில்லை.

எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி நடக்கவில்லையா என்பதை அஜித்பவார் தான் கூறவேண்டும். சிவசேனா கட்சி உடைக்கப்படவில்லையா? தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயற்சி நடக்கவில்லையா?

இதை சரத்பவார் கூட கூறியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சரத்பவார் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றிய தகவல்களை நான் முன்வைப்பதில் என்ன தவறு?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News