இந்தியா

பிரதமர் தங்கிய ஓட்டலுக்கு ரூ.80 லட்சம் கட்டணம் பாக்கி- சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

Published On 2024-05-25 04:38 GMT   |   Update On 2024-05-25 04:38 GMT
  • தகவல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவிக்கப்பட்டதும் தெரியவந்தது.
  • எங்கள் ஓட்டலின் சேவைகளை பயன்படுத்தி 12 மாதங்களுக்கு பிறகும் ரூ. 80.6 லட்சம் கட்டணம் செலுத்தவில்லை என்று தெரிவித்துஇருந்தார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் மைசூருவில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து நடத்திய 50 ஆண்டு கால புலிகள் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை வந்தார்.

அப்போது பிரதமருடன் வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் மைசூருவில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்கினர். பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக ரூ. 3 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியின் மொத்த செலவு ரூ. 6.33 கோடியாக உயர்ந்தது. மத்திய அரசு சார்பில் ரூ. 3 கோடி வழங்கப்பட்டாலும், மாநில வனத்துறை மீதி 3.33 கோடியை கேட்டும் இன்னும் அந்த தொகை விடுவிக்கப்படவில்லை.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்த நிகழ்ச்சிக்காக ரூ.3 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பிரதமரின் திட்டத்தின் தேவைகளின் அடிப்படையில் சில கூடுதல் நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டதாகவும், இதனால் செலவு அதிகரித்ததும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பான தகவல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதற்கிடையே கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி கர்நாடக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனவிலங்கு) டெல்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு ரூ.3.33 கோடி பாக்கியை நினைவூட்டி கடிதம் எழுதினார். இதற்கிடையே தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி மைசூருவில் பிரதமர் மற்றும் அவருடன் வந்தவர்கள் தங்கிய ஓட்டலுக்கு கட்டணத்தை மாநில அரசு செலுத்த வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தது.

இதற்கிடையே பிரதமர் தங்கிய பிரபல ஓட்டலின் பொது மேலாளர் (நிதி), வனத்துறை துணை பாதுகாவலர் பசவராஜூக்கு கடந்த 21-ந்தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில் எங்கள் ஓட்டலின் சேவைகளை பயன்படுத்தி 12 மாதங்களுக்கு பிறகும் ரூ. 80.6 லட்சம் கட்டணம் செலுத்தவில்லை என்று தெரிவித்துஇருந்தார். தொடர்ச்சியாக இது குறித்து நினைவூட்டியும் பணம் செலுத்தப்படாமல் உள்ளது. எனவே நிலுவையில் உள்ள பாக்கிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் தாமதமாக செலுத்தும் வட்டி பொருந்தும். எனவே கட்டணத்துடன் ரூ. 12.09 லட்சம் வட்டியையும் சேர்த்து ஜூன் 1-ந் தேதிக்குள் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இது மத்திய அரசின் திட்டம் என்ற காரணத்திற்காக தொகையை திருப்பி செலுத்துவதற்கான மத்திய அரசின் உத்தரவை மாநில அரசு மறுத்துவிட்டது என்று கூறினார்.

Tags:    

Similar News