இந்தியா

பா.ஜனதா மாநில தலைவரின் பாதயாத்திரை நிறைவு விழா: பிரதமர் மோடி நாளை கேரளா வருகை

Published On 2024-02-26 06:24 GMT   |   Update On 2024-02-26 06:24 GMT
  • கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன், அம்மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
  • திருவனந்தபுரம் வி.எஸ்.எல்.சி.யில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

திருவனந்தபுரம்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கேரளா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் வந்தார். அவர் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பிரதமரின் அடுத்தடுத்த சுற்றுப்பயணம் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக நாளை(27-ந்தேதி) கேரளா வருகிறார்.

கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன், அம்மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த பாதயாத்திரையின் நிறைவு நாள் கூட்டம் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி திருவனந்தபுரத்துக்கு நாளை வருகிறார். அவருக்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின்பு பாதயாத்திரை நிறைவு கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி முரளிதரன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கும்மனம் ராஜசேகரன், பி.கே.கிருஷ்ணதாஸ், மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தேசிய-மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முன்னதாக திருவனந்தபுரம் வி.எஸ்.எல்.சி.யில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதில் ககன்யான் திட்டத்துக்காக புதுப்பிக்கப்பட்ட டிரை சோனிக் காற்றாலை சுரங்கப்பாதையை அவர் திறந்து வைக்கிறார்.

இந்த காற்றாலை சுரங்கப்பாதை 2022-ல் நிறுவப்பட்டது. ககன்யான் ஆய்வுடன் பறந்த ஜி.எஸ்.எல்.சி. சோதனைக்காக மேலும் பலப்படுத்தப்பட்டது. அதனை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

Tags:    

Similar News