இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு முதல் முறையாக காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடி

Published On 2024-03-07 09:55 GMT   |   Update On 2024-03-07 09:55 GMT
  • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு சென்றார்.
  • பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க. அரசால் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த மாதம் 20-ம் தேதி ஜம்முவுக்கு சென்று ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று காஷ்மீருக்கு சென்றார். பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஸ்ரீநகர் பாக்சி மைதானத்தில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம்-வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் உள்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புத்துணர்ச்சி, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டின் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோவில்கள், சாமுண்டீஸ்வரி திருக்கோவில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

உங்கள் நாட்டை பாருங்கள், மக்கள் தேர்வு 2024 மற்றும் இந்தியாவுக்கு செல்லுங்கள் எனும் உலக அளவிலான பிரசாரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 பேருக்கு பணி நியமண ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

Tags:    

Similar News