இந்தியா

உள்ளே நுழைந்த இருவர் - வாயை திறக்காத இருவர்

Published On 2023-12-14 06:59 GMT   |   Update On 2023-12-14 07:08 GMT
  • 2001 தாக்குதலின் 22-வது நினைவு தினமான நேற்று மீண்டும் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்
  • பல கட்சி அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

2001 டிசம்பர் 13 அன்று பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பாராளுமன்றத்தில், 11:40 மணியளவில் 5 பயங்கரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கினர். அவர்கள் தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் 6 டெல்லி காவல்துறையை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். இறுதியில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2014ல் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சியில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற சில மாதங்களில் பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

கடந்த மே 28 அன்று, இப்புதிய கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இக்கட்டிடத்தில் இம்மாதம் 4 அன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

2001 தாக்குதல் நடந்து 22 வருடங்களான நிலையில், நேற்று அதன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அதற்கு பிறகு மக்களவையில் வழக்கமான அலுவல் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திடீரென குதித்த இருவர் சர்வாதிகார ஆட்சிய ஒழிக என்று கோஷம் எழுப்பிக் கொண்டே சபாநாயகர் அருகே செல்ல முயன்றனர். அவர்கள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த கேன் போன்ற உருளையை வீசியதில், மஞ்சள் வர்ண புகை வெளிக்கிளம்பியது. இதில் உறுப்பினர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்த போதிலும், வேறு சில உறுப்பினர்கள் துணிச்சலுடன் அந்த மர்ம நபர்கள் இருவரையும் நெருங்கி, வளைத்து பிடித்து, அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதே நேரம் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கோஷங்களை எழுப்பி கொண்டே வர்ண புகை குண்டை வீசினர். அவர்களும் காவல்துறையினரால் உடனே கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

2001 தாக்குதல் நடந்து 22 வருடங்கள் ஆன அதே தினத்தில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய கட்டிடம் என சொல்லப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் சுலபமாக அத்துமீறி இத்தகைய தாக்குதலில் சிலர் ஈடுபட முடிந்தது அரசியல் தலைவர்களை மட்டுமின்றி அனைத்து இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்களிலும், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் மக்களவை உறுப்பினர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதாக கருதும் அளவிற்கு நடைபெற்ற இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து இதுவரை பிரதமர்  மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தொலைக்காட்சியிலோ, சமூக வலைதளங்களிலோ அல்லது தங்கள் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கிலோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்கு சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News