பட்டாசு வெடித்தால் தான் விமானம் பறக்கும்... பறவைகளை விரட்ட ஆண்டுக்கு ரூ.12 கோடி செலவு
- ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது.
- ஒரு நாளைக்கு பட்டாசு வெடிக்க மட்டும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், அரபிக்கடலோரத்தில் அமைந்துள்ளது. பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையில் உள்ள மீனவ கிராம பகுதியில் இந்த விமான நிலையம் உள்ளதால், இங்கு மீன்களை இரையாக தேடி வரும் பறவைகளின் தொல்லை அதிகம். இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் போதும், விமானங்கள் வந்து இறங்கும் போதும் கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் பறவைகளால் தினமும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் பறவைகள் மோதி 10 விமானங்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பறவைகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் நாலாபுறமும் சுமார் 12 இடங்களில், அவ்வப்போது அதி சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க செய்து பறவைகளை விரட்டியடித்து வருகிறார்கள். விமானங்கள், தரை இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் முன்பாக இந்த பட்டாசுகள் முழங்கும். சில நேரங்களில், வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு பட்டாசு வெடிக்க மட்டும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.
அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.12 கோடிக்கு பட்டாசுகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெடிக்கப்படுகிறது. இது தவிர பட்டாசு வெடிக்கும் பணிக்கு 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது மாத சம்பளம் ரூ.24 ஆயிரம் ஆகும். சம்பள வகையில் மட்டும் மாதம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் செலவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.