இந்தியா

திருச்சூரில் நிலஅதிர்வு: பொதுமக்கள் அச்சம்

Published On 2023-07-10 05:14 GMT   |   Update On 2023-07-10 05:38 GMT
  • நில அதிர்வால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
  • பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 2-வது முறையாக ஏற்பட்ட நில அதிர்வில் பொன்னுக்கரை நேதாஜி வீதியில் உள்ள இரு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. திருக்கூர், அழகப்பநகர், வரந்தரப்பள்ளி, புதுக்காடு, நென்மணிகரை ஆகிய ஊராட்சிகளில் பல இடங்களில் நிலஅதிர்வும், வெடிச்சத்தமும் ஏற்பட்டது.

இந்நிலையில் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பல இடங்களில் நில அதிர்வு மற்றும் வெடி சத்தம் ஏற்பட்டது. கடந்த 2 முறை நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில், நேற்று அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நில அதிர்வால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News