இந்தியா

மகனுக்காக திருப்பதியில் மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பவன் கல்யாணின் மனைவி

Published On 2025-04-14 07:51 IST   |   Update On 2025-04-14 07:51:00 IST
  • புகையை சுவாசித்ததால், சிறுவனுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
  • அன்ன லெஜினோவா நேற்று மாலை திருப்பதி கோவிலுக்கு வந்து தேவஸ்தானம் விதிகளின்படி காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியாக இருப்பவர் பவன் கல்யாண். இவருடைய மனைவி அன்ன லெஜினோவா. இவர்களுடைய மகன் மார்க் சங்கர். சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் மார்க் சங்கர் படித்து வருகிறான். சமீபத்தில் அந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் மார்க் சங்கர் சிக்கினான். இதில் அவன் லேசான காயம் அடைந்தான். மேலும் புகையை சுவாசித்ததால், நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பவன் கல்யாண் சிங்கப்பூர் விரைந்து சென்று, மகனுக்கு ஆறுதல் கூறினார். தற்போது சிறுவன் உடல் நலம் தேறியதால், ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியுள்ளான். இதையடுத்து மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு பவன் கல்யாண் ஐதராபாத் வந்தார்.

இந்த நிலையில், பவன் கல்யாண் மனைவி அன்ன லெஜினோவா நேற்று மாலை திருப்பதி கோவிலுக்கு வந்து தேவஸ்தானம் விதிகளின்படி காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார். கிறிஸ்தவர் என்பதால் ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறி, ஆவணத்தில் கையெழுத்திட்டு தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.

முதலில் ஸ்ரீ வராக சுவாமி கோவிலில் தரிசனம் செய்து தீர்த்த பிரசாதம் பெற்ற பிறகு, புனித பத்மாவதி கல்யாண கட்டாவில் தலைமுடியை காணிக்கையாக கொடுத்தார்.

தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய மகனுக்காக பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஜினோவா திருப்பதியில் தலைமுடியை காணிக்கையாக கொடுத்து தனது விரதத்தை பூர்த்தி செய்தார்.

Tags:    

Similar News