இந்தியா

ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே

பாராளுமன்ற கட்டிட திறப்பு விவகாரம்.. நாடு தழுவிய போராட்டம்.. ஆதிவாசி காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2023-05-25 13:28 GMT   |   Update On 2023-05-25 13:34 GMT
  • புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும் என பேட்டி.
  • பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம்

புதுடெல்லி:

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைப்பது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அதுவும் பெண் ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும்.

பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது ஜனாதிபதி என்பதால், அவர் பாராளுமன்றத்தின் முக்கிய அங்கம். எனவே, புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும். அவர் பழங்குடியினர் என்பதால் இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை.

பழங்குடியினர் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் இந்த முயற்சிக்கு எதிராக, நாளை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல. முடிவை மாற்றுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பிரதமர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதியை அழைத்து திறந்து வைக்க வேண்டும்.

பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். பழங்குடியினரை அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News