குஜராத் எல்லையில் ராணுவ கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான்.. ராஜ்நாத் சிங் வார்னிங்!
- குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக்.
- இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.
இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், "சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.
இந்தப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா பலமுறை முயன்றபோதும், பாகிஸ்தானின் ஒத்துழைக்கவில்லை.
1965 போரில் இந்திய இராணுவம் லாகூர் வரை சென்றது. இப்போது 2025-ல், கராச்சிக்கு செல்லும் ஒரு வழி இந்த க்ரீக் வழியாகவும் செல்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து இலக்குகளையும் இந்தியா வெற்றிகரமாக அடைந்ததாகவும், பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது இந்தியாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.