இந்தியா

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள் பைசரன் பள்ளத்தாக்கில் பதுங்கல்?

Published On 2025-05-02 10:03 IST   |   Update On 2025-05-02 10:03:00 IST
  • பயங்கரவாதிகள் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது.
  • ராணுவம், போர் விமானங்கள், போர் கப்பல்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளின் படங்கள் வெளியிடப்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து குறுகிய கால விசா உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக இருதரப்பில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லையை கடந்து தங்கள் நாடுகளுக்கு சென்றனர்.

நேற்று இரவோடு இந்த எல்லை முற்றிலுமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானியர்கள் 911 பேர் இந்தியாவை விட்டுவெளியேறினார்கள். பாகிஸ்தானில் இருந்து 1,617 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கு பழி வாங்கும் விதமாக பாகிஸ்தான், இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்கள் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வருகிற 24-ந்தேதி அதிகாலை 5.29 மணி வரை பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு விமானங்கள், அந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள், ராணுவ விமானங்கள் ஆகியவை இந்திய வான் எல்லையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது. அதில் ஈடுபட்டுள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

மேலும் பயங்கரவாதிகள் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது. முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நேரத்தில், எந்த இலக்கு மீது தாக்குதல் நடத்துவது என்பதை முடிவு செய்ய முப்படைகளுக்கு முழு அதிகாரம் இருப்பதாக கூறினார். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இதற்காக ராணுவம், போர் விமானங்கள், போர் கப்பல்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை ஐ.ஜி, டி.ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கண்காணிப்பில் பல்வேறு தேசிய புலனாய்வு முகமை குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதலை நேரில் பார்த்த சாட்சிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்று உள்ளனர். அவர்களையும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தகவல்களை திரட்ட தேசிய புலனாய்வு முகமை குழுவினர் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பயங்கரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து 4 இடங்களில் உளவு பார்த்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய 4 பயங்கரவாதிகளும் தற்போது தெற்கு காஷ்மீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை உறுதி செய்துள் தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் சிம்கார்டு பொருத்திய செல்போன்களை பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக சாட்டிலைட் போன் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் சந்தேகிக்கப்படும் நபர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பஹல்காம் பகுதியில் வசிக்கும் மக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News