இந்தியா

அமைச்சரவை மாற்றம் மட்டுமே, தலைமைத்துவம் இல்லை: பரமேஷ்வரா சூசக தகவல்

Published On 2025-11-16 19:01 IST   |   Update On 2025-11-16 19:01:00 IST
  • சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
  • அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இந்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதனால் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து நான்தான் முதல்வராக இருப்பேன். மாற்றம் செய்வது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என சித்தராமையா தெரிவித்தார்.

நேற்று சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அமைச்சரவையை மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-

அமைச்சரவை மாற்றம் குறித்து சித்தராமையா மற்றும் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அகில இந்திய தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் இதைத்தான் சொல்கின்றன, இந்த விஷயம் இப்போது வெளிப்படையாகி வருகிறது. பொதுவாக, அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது தலைமை மாற்றங்கள் ஏற்படாது.

அமைச்சரவை மாற்றத்திற்கான அனுமதி பெற்ற பிறகு சித்தராமையா மற்றும் உயர்மட்டக்குழு முடிவு செய்யும். இதில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.

இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News