இந்தியா

இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு ஞாபகமறதி நோய்: புதிய ஆய்வில் தகவல்

Published On 2023-03-10 03:31 GMT   |   Update On 2023-03-10 03:31 GMT
  • ‘டெமன்ஷியா’ என்பது மூளை சம்பந்தப்பட்ட வியாதி ஆகும்.
  • இது இந்திய மக்கள்தொகையில் 8.44 சதவீதம் ஆகும்.

புதுடெல்லி :

அமெரிக்காவில் உள்ள சுர்ரே பல்கலைக்கழகம், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ர் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர்.

உலகிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு மாதிரி ஒன்றை உருவாக்கி, அதன் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதற்காக 31 ஆயிரத்து 477 பேரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். இதில் கிடைத்த முடிவுகள், ஒரு மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, இந்தியாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோரில் 1 கோடியே 8 லட்சம் பேருக்கு 'டெமன்ஷியா' என்ற ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

இது இந்திய மக்கள்தொகையில் 8.44 சதவீதம் ஆகும். அதே சமயத்தில், அமெரிக்காவில் 8.8 சதவீதம் பேருக்கும், இங்கிலாந்தில் 9 சதவீதம் பேருக்கும், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 8.5 முதல் 9 சதவீதம் பேருக்கும் இந்நோய் இருக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 60 வயதை தாண்டியவர்களில் கணிசமானோருக்கு ஞாபகமறதி நோய் ஏற்படும் என்றும், அதாவது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 19.1 சதவீதம் பேருக்கு இந்நோய் ஏற்பட்டு இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது.

இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களிடையே பெண்கள், கல்வியறிவு இல்லாதவர்கள், கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகியோருக்குத்தான் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

'டெமன்ஷியா' என்பது மூளை சம்பந்தப்பட்ட வியாதி ஆகும். இந்த நோய் வந்தவர்களுக்கு நினைவுத்திறன், சிந்திக்கும் திறன், கேள்விக்கு பதில் அளிக்கும் திறன், முடிவு எடுக்கும் திறன் ஆகியவை குறைந்து விடும். மொத்தத்தில், அன்றாட பணிகளை செய்வதற்கான திறன் கடுமையாக பாதிக்கப்படும்.

Tags:    

Similar News