எவ்வளவு கொள்ளையடித்தாலும்.. அரசு நிலத்தில் மோசடி செய்த அஜித் பவார் மகன் - மோடியின் மௌனத்தை விமர்சித்த ராகுல்
- ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர்.
- தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனின் நிறுவனத்துக்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த் பவார்.
இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.
இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்
இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மகாராஷ்டிரத்தில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனின் நிறுவனத்துக்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
மேலும் முத்திரைத் தீர்வையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கொள்ளை மட்டுமல்ல, கொள்ளைக்கு ஒப்புதல் கொடுக்கும் சட்ட முத்திரைகூட.
இது 'வாக்கு திருட்டு' மூலம் உருவாக்கப்பட்ட அந்த அரசாங்கத்தின் 'நிலத் திருட்டு'. அவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும், மீண்டும் வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வருவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஜனநாயகம், பொதுமக்கள் அல்லது தலித்துகளின் உரிமைகள் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
மோடி ஜி, உங்கள் மௌனம் நிறைய பேசுகிறது. தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிக்கும் கொள்ளையர்களால் உங்கள் அரசாங்கம் இயங்குவதால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.