இந்தியா

நிதிஷ் குமார்

பிரதமர் பதவி மீது ஆசையில்லை- நிதிஷ்குமார் பேட்டி

Published On 2022-08-12 10:30 GMT   |   Update On 2022-08-12 10:30 GMT
  • பீகார் மக்களுக்கு மட்டும் சேவையாற்ற விரும்புகிறேன்.
  • பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையை உருவாக்க முயற்சி.

பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆதரவுடன் மெகா கூட்டணியின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. பாட்னாவில் இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் பதவி மீது ஆசையில்லை என்றும், பீகார் மக்களுக்கு மட்டும் சேவையாற்றவே விரும்புகிறேன் எனவும் கூறினார்.

எனினும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க, தமது பங்களிப்பதை செலுத்த ஆவலுடன் இருப்பதாக கூறினார்.இது தொடர்பாக தம்மை பல தலைவர்கள் தொடர்பு கொண்டு வருவதாகவும், வரும் நாட்களில் இதற்கான நடவடிக்கைகளை பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

பீகாரில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு புதிய ஆட்சியைப் அமைத்துள்ள மெகா கூட்டணிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் மக்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என்றும் நிதிஷ்குமார் குறிப்பிட்டார்.

முன்னதாக நிதிஷ்குமார் துணை ஜனாதிபதியாக விருப்பம் தெரிவித்ததாக, அம்மாநில பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவத்திருந்தார். இதை மறுத்த நிதிஷ்குமார் அது பொய், தமக்கு அந்த பதவி மீது ஆசையே இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News