இந்தியா

ஏழைகளை கொண்ட பணக்கார நாடு இந்தியா: நிதின் கட்காரி

Published On 2022-09-30 02:55 GMT   |   Update On 2022-09-30 02:55 GMT
  • உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம்.
  • ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது.

மும்பை :

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் பாரத் விகாஸ் பரிஷத் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். நாம் ஏழை மக்கள் தொகையை கொண்ட பணக்கார நாடு. ஏழை மக்கள் பட்டினி, வேலையின்மை, வறுமை, பணவீக்கம், சாதி பாகுபாடு, தீண்டாமை போன்றவற்றை சந்தித்து வருகின்றனர்.

இது சமுதாய வளர்ச்சிக்கு நல்லதல்ல. சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது. சமூக ஏற்றத்தாழ்வை போல, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்து உள்ளது. ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளியை குறைக்க கல்வி, சுகாதாரம், சேவை துறைகளில் வேலை செய்ய வேண்டியது உள்ளது.

பாரத் விகாஸ் பரிஷத்தின் நோக்கம் தெளிவானது. ஆனால் சமூக கடமை, உணர்வுடன் நாம் எப்படி வெவ்வேறு வகையான பிரிவுகளில் பணியாற்ற போகிறோம் என்பது தான் சவாலானது. நாம் நமது லட்சியத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே அதை சாதிக்க நமது வேகத்தை அதிகரிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதாக இருக்கும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே நாட்டின் வளர்ச்சிக்காக எல்லோரும் அவர்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News