இந்தியா

முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்

Published On 2022-09-28 22:08 IST   |   Update On 2022-09-28 22:08:00 IST
  • அனில் சவுகான் 2021-ம் ஆண்டு ராணுவத்தின் கிழக்குப் பகுதியின் கமாண்டராக பணி ஓய்வு பெற்றார்.
  • முப்படை தலைமை தளபதி மட்டுமின்றி இந்திய இராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார்

புதுடெல்லி:

முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் புதிய தளபதியை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திவந்தது.

இந்த நிலையில், இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் (வயது 61) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரலான அனில் சவுகான், கடந்த 40 ஆண்டுகளாக பல முக்கிய ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

1961-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி பிறந்த அனில் சவுகான், கடக்வாஸ்லாவில் உள்ள என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். பின்னர் 1981-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரைபிள்ஸ் படைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். இவர் 2021-ம் ஆண்டு ராணுவத்தின் கிழக்குப் பகுதியின் கமாண்டராக பணி ஓய்வு பெற்றார். மேலும் இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநராகவும், ஐ.நா சபை திட்டங்களிலும் பணியாற்றி உள்ளார்.

Tags:    

Similar News