null
9 பேர் உயிரிழந்த நவ்காம் குண்டுவெடிப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி - கார்கே
- அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
- மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில், அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், ஜம்மு காஷ்மீரின் நவ்காமில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, 24 பேர் காயமடைந்துள்ளனர் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கோழைத்தனமான கார் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் இது உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.
பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது.
சமீபத்திய செங்கோட்டை பயங்கரவாத தாக்குதை முன்வைத்து, வெளிப்புற சக்திகளின் ஆதரவுடன் பயங்கரவாதத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.