இந்தியா
null

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2025-08-15 20:47 IST   |   Update On 2025-08-15 20:49:00 IST
  • 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
  • இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார்.

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.

அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவர் தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் தனது வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.  

இல கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி எக்ஸ்-இல் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், "நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களின் மறைவால் வேதனை அடைந்தேன். தேச சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.

தமிழ்நாடு முழுவதும் பிஜேபி-யின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News