இந்தியா

எனது பாராளுமன்றம் எனது பெருமை... மணல் சிற்பம் வரைந்து கொண்டாடிய சுதர்சன் பட்நாயக்

Published On 2023-05-28 01:33 GMT   |   Update On 2023-05-28 01:33 GMT
  • செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
  • ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படுகிறது செங்கோல்

புதுடெல்லி:

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். புதிய பாராளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே, தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது.

அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும். அந்த செங்கோல் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் வழங்கப்பட்டு, பிறகு ஆதீனம் மூலம் நேருவின் கைக்கு வந்தது. அப்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. இத்தகைய சிறப்புடைய அந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படும் அந்த செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி முடிவு செய்து உத்தரவிட்டார். அதன்படி இன்று அந்த செங்கோல் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்படுகிறது.

புதிய பாராளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார். அத்துடன், புதிய பாராளுமன்றம் தொடர்பான ஒரு வீடியோவை பகிர்ந்த அவர், மக்கள் தங்களின் எண்ணங்களையும். கருத்துகளையும் தங்கள் குரலில் பதிவிட்டு, எனது பாராளுமன்றம் எனது பெருமை என்ற ஹேஷ்டேக்குடன் பகிரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் ''எனது பாராளுமன்றம் எனது பெருமை'' என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டிடம், புதிய இந்தியாவின் சின்னம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தேசத்திற்கான உங்கள் அர்ப்பணிப்புக்காக உங்களுக்கு பாராட்டுக்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக பாராளுமன்றம் கட்டப்பட்டதை நினைத்து எங்கள் இதயம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது, எனவும் சுதர்சன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News