கட்டிடங்களை காற்று மாசு மறைத்து இருப்பதையும், மூச்சு பயிற்சியை சிலர் மேற்கொண்டு இருப்பதையும் படத்தில் காணலாம்.
தலைநகர் டெல்லியை மிஞ்சியது: மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம்
- மும்பை நகர மக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
- தற்போது குளிர்காலம் என்பதால் காற்றின் வேகம் குறைவாக உள்ளது.
மும்பை :
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது வாடிக்கையாகி விட்ட நிலையில், நாட்டின் நிதி தலைநகராக விளங்கும் மும்பையிலும் காற்றின் தரம் கடந்த சில நாட்களாக மோசமாகி வருகிறது.
காற்றின் தரம் ஏ.கியூ.ஐ. என்ற அளவை கொண்டு கணக்கிடப்படுகிறது. அது 1 முதல் 100 வரையிலான ஏ.கியூ.ஐ. ஆக இருந்தால் நல்லது என்று அர்த்தம். 100 முதல் 200-க்குள் இருந்தால் பரவாயில்லை எனலாம். 200 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 300-க்கும் மேல் இருந்தால் மிகவும் மோசம் என்றும் அளவிடப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியது. அதாவது நகரில் நேற்று காற்றின் தரம் 309 ஏ.கியூ.ஐ. (மிகவும் மோசம்) என்ற அளவில் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் நேற்று டெல்லியில் காற்றின் தரம் 249 ஏ.கியூ.ஐ. (மோசம்) என்ற அளவில் தான் பதிவாகி இருந்தது. இதனால் காற்றின் தரத்தில் மும்பை மாநகரம் தலைநகர் டெல்லியை மிஞ்சி விட்டது.
நேற்று முன்தினத்தை பொறுத்தவரை மும்பையில் 315 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் காற்றின் தரம் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் டெல்லியில் காற்றின் தரம் 262 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் தான் இருந்தது.
இதனால் மும்பை நகர மக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள், கடற்கரை சாலை பணிகள், எண்ணில் அடங்காத கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதுபோன்ற காரணங்களால் தான் நகரில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது குளிர்காலம் என்பதால் காற்றின் வேகம் குறைவாக உள்ளது. இதனால் காற்றில் சேரும் மாசு நகராமல் இருப்பதால், காற்று மாசு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு நகரில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தநிலையில் மும்பையில் காற்றின் தரம் மோசமாக இருப்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியதாவது:-
கட்டுமான பணிகளால் காற்று மாசு அதிகரித்து இருப்பது என்பதை ஏற்க முடியாது. கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடக்கிறது. மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம், ஆர்.சி.எப், எச்.பி.சி.எல். போன்ற நிறுவனங்கள் அதிகளவில் கழிவுகளை வெளியேற்றுகின்றன. அதுதான் காற்று மாசு அதிகரிக்க காரணம். இந்த பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடம் பேசி உள்ளோம்.
மும்பையில் சில நாட்களில் ஜி20 மாநாடு கூட்டங்கள் நடக்க உள்ளன. இதற்காக வெளிநாட்டில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர். எனவே காற்று மாசு பிரச்சினை குறித்து பெட்ரோலிய அமைச்சகத்துடன் பேசி உள்ளோம். இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.