இந்தியா

"முகலாயர்கள் வெகுஜனக் கொலைகாரர்கள்.. கோயில்களை அழிப்பவர்கள்" - சர்ச்சையில் புதிய NCERT பாடப்புத்தகம்

Published On 2025-07-17 04:30 IST   |   Update On 2025-07-17 04:30:00 IST
  • படுகொலைகளைச் செய்து மண்டை ஓடு கோபுரங்களை அமைத்த ஒரு கொடூரமான மனிதராக சித்தரிக்கப்படுகிறார்.
  • தேசிய கல்விக் கொள்கை 2020 இன் படி திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் NCERT இன் புதிதாக வெளியிடப்பட்ட வரலாற்று பாடப்புத்தகத்தில், முகலாய ஆட்சியாளர்களை வெகுஜன கொலைகாரர்கள் மற்றும் கோயில்களை அழிப்பவர்கள் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகம், முகலாய ஆட்சியாளர்களான பாபர், அக்பர் மற்றும் ஔரங்கசீப்பை கொலைகாரர்கள் மற்றும் கோயில்களை அழிப்பவர்கள் என்று விவரிக்கிறது.

இந்தப் பாடப்புத்தகங்கள், தேசிய கல்விக் கொள்கை 2020 இன் படி திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

முகலாயப் பேரரசின் நிறுவனர் பாபர், படுகொலைகளைச் செய்து மண்டை ஓடு கோபுரங்களை அமைத்த ஒரு கொடூரமான மனிதராக சித்தரிக்கப்படுகிறார். பேரரசர் அக்பர் படுகொலைகளையும் மதப் பிரச்சாரத்தையும் செய்து இந்துஸ்தான் முழுவதும் கோயில்களை அழித்ததாகக் குறிப்பிடப்படுகிறார்.

மதுரா, பனாரஸ், சோம்நாத் மற்றும் சீக்கிய மற்றும் சமண மையங்களில் உள்ள கோயில்கள், குருத்வாராக்கள் மற்றும் பள்ளிகளை அழித்த ஒருவராக ஔரங்கசீப்பை இந்தப் புத்தகம் சித்தரிக்கிறது.

புதிய திருத்தத்தை விளக்கிய NCERT அதிகாரி ஒருவர், வரலாற்றுப் புத்தகங்கள் சமநிலையானவை மற்றும் முற்றிலும் ஆதார அடிப்படையிலானவை என்று கூறினார்.

கடந்த கால நிகழ்வுகளுக்கு இன்று யாரையும் குறை சொல்லக்கூடாது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் புத்தகத்தில் ஒரு எச்சரிக்கை குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக 7 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களிலிருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களைப் பற்றிய அனைத்து குறிப்புகளையும் நீக்கும் முடிவை NCERT எடுத்தது .

அதன்படி, மகா கும்பமேளா, மேக் இன் இந்தியா, பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ போன்ற அரசாங்க முயற்சிகள் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.  

Tags:    

Similar News