இந்தியா

வாளால் மகனை தாக்கியவர்களை கல் வீசி துணிச்சலாக விரட்டிய தாய்- வீடியோ

Published On 2024-08-20 11:56 IST   |   Update On 2024-08-20 11:56:00 IST
  • ஒரு பெண் ஸ்கூட்டரில் அமர்ந்து இருந்த தனது மகனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
  • தாக்கப்பட்ட நபர் சுனில் ராமப்பா லமணி என்று தெரிய வந்துள்ளது.

பட்டப்பகலில் மகனை வாளால் தாக்கிய மூன்று பேரை விரட்டிய பெண், தனது மகனின் உயிரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் ஜெய்சிங்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவில்,

ஒரு பெண் ஸ்கூட்டரில் அமர்ந்து இருந்த தனது மகனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தாய்-மகன் இருவரும் நின்று கொண்டிருக்கும் இடத்தை தாண்டி அவர்களது வண்டியை நிறுத்தினர்.

3 பேரில் ஒருவன் பின்னால் இருந்து வாளை எடுத்துக்கொண்டு வந்து, ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த நபரை தாக்குகிறான்.

அப்பொழுது பாதிக்கப்பட்டவரின் தாய் ஒரு கல்லை எடுத்து தாக்கியவர்களை விரட்டினார்.

பின்னர் அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து, நடைபாதையில் இருக்கும் கற்களை எடுத்து, தாக்க வந்தவர்களை நோக்கி வீசுகின்றனர்.

இதையடுத்து அவர்கள் தாக்குதலை கைவிட்டு தப்பி ஓடினர். மகனை வாளால் தாக்க வந்தவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய தாயின் துணிச்சல் சமூக வலைதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.

தாக்கப்பட்ட நபர் சுனில் ராமப்பா லமணி என்று தெரிய வந்துள்ளது. அவரது புகாரின் பேரில், வினோத் காசு பவார், அரவிந்த் காசு பவார் மற்றும் வினோத் பாபு ஜாதவ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News