இந்தியா

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி... காரணம் இதுதான்

Published On 2025-11-03 08:40 IST   |   Update On 2025-11-03 08:40:00 IST
  • தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
  • யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தேஜஸ்வி யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? சிலர் இன்னமும் மோடிஜியின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் முலாயம் சிங்கின் பெயரைச் சொல்கிறார்கள். சிலர் அகிலேஷ் யாதவின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் சொல்கிறார்கள். ஆகையால் இப்போது இருப்பவர்களில் யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தேஜஸ்வி, "இப்போது இருப்பவர்களில் எனக்கு ஸ்டாலின் என்று தோன்றுகிறது. நம்முடைய (பீகார்) முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருவதை நான் பார்க்கவில்லை. முதலீட்டைக் கொண்டுவருவதற்காக அவர் எதுவும் செய்வதில்லை. ஆனால், ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்கிறார். அவர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்துகிறார், முதலீடுகளைக் கொண்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.

இந்த வீடியோவை திமுகவினர் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News