இந்தியா

காலில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட பக்தருக்கு முதலுதவி அளித்த கேரள மந்திரி

Published On 2022-11-19 08:36 IST   |   Update On 2022-11-19 08:36:00 IST
  • தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
  • ஐயப்ப பக்தர் ஒருவரின் காலில் திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1-ந்தேதியான நேற்று முன்தினம் முதல் நடை திறக்கப்பட்டு மண்டல, மகரவிளக்கு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் சபரிமலையில் இருந்து இறங்கி பம்பையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு அவருக்கு எதிரே மலையேறிக் கொண்டிருந்தனர். அதன்படி இருமுடி கட்டுகளுடன் மலையேறி வந்த ஐயப்ப பக்தர் ஒருவரின் காலில் திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இதனால், அந்த பக்தர் வலிதாங்க முடியாமலும், தொடர்ந்து நடக்க முடியாமலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதைக்கண்ட மந்திரி ராதாகிருஷ்ணன் சிறிதும் தாமதிக்காமல் உடனே அந்த பக்தருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் நீவி விட்டு முதலுதவி அளித்தார்.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். தற்போது அந்த காட்சிகள் ''மக்களுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் சேவை'' என்ற தலைப்பில் கேரளாவில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News