முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்
- தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது.
இதுபற்றி கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் டெல்லியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
இதுபற்றிய தகவலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு 8.05 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.
முன்னதாக டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய இடங்களில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மறைந்த மன்மோகன் சிங் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரங்கல் செய்தியில் "இத்தகைய சிறந்த மனிதரை, நல்ல அரசியல்வாதியை நாம் இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் மிகவும் பணிவான அரசியல் தலைவராக இருந்தார் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாடு மற்றும் சமுதாய நலனிற்கு முன்னுரிமை வழங்கினார். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பதவிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களை நினைவு கூர்ந்து, இந்தியா- சீனா உறவுகளின் வளர்ச்சிக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கியதாகக் கூறி சீனா அஞ்சலி செய்தி வெளியிட்டுள்ளது.
டாக்டர் மன்மோகன் மறைவு செய்தியை கேட்டு கொல்கத்தாவில் வசித்து வரும் அவரது சகோதரி கோபிந்த் மவன அஞ்சலி
டெல்லி மாநில முதல்வர் அதிஷி, மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரை இழந்துவிட்டது, டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் ஆளுமையால். அவர் தனது வாழ்க்கையை தனது நாட்டிற்காக அர்ப்பணித்தவர். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30 மணி அளவில் தொடங்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.